வாக்கு திருட்டு விவகாரம்: ஆதார் எண்ணை சமர்ப்பித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி!
Voter issue SC Case new order
பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட அல்லது விடுபட்டவர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விண்ணப்பச் செயல்முறையில் மக்களுக்கு உதவுமாறு பிகாரில் பதிவு செய்யப்பட்ட 12 முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.
முந்தைய விசாரணையின் போது, வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களையும், அவர்களின் பெயர் எதற்காக நீக்கப்பட்டது என்பதையும் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது.
நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது ஆதார் எண்ணையோ சமர்ப்பித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெளிவுபடுத்தினர். இந்த நடைமுறை வாக்காளர்களுக்கு எளிமையாக அமைய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டனர்.
மேலும், 65 லட்சம் பேர் பெயர் விடுபட்டுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன்வராத அரசியல் கட்சிகளின் செயல்முறையை நீதிமன்றம் கண்டித்தது. அரசியல் கட்சிகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதற்கான அறிக்கையை அடுத்த விசாரணையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கு செப்டம்பர் 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் தாக்கல் செய்யும் விண்ணப்பங்களுக்கு உரிய ரசீதுகளை வழங்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Voter issue SC Case new order