செப்டம்பர் 11-இல் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் அதிரடி! - Seithipunal
Seithipunal


வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஊதியச் சீரமைப்பு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வங்கிகளின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU) அழைப்பு விடுத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) நடைபெற்ற பலகட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளில் எவ்விதச் சுமுக உடன்பாடும் எட்டப்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு உறுதியாக முடிவெடுத்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாகப் பணியாற்ற ஊழியர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், அனைத்துச் சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கும் '5 நாள் வங்கி வேலைத் திட்டம்' கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. மேலும், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய முறையை ரத்து செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இவற்றுடன், ஓய்வூதியத் தொகையைத் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்குவதோடு, தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற வாய்ப்பளிக்க வேண்டும் என்பதும் ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளாகும்.

இதனிடையே, வங்கி சங்கங்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இருப்பினும், பிரதான கோரிக்கையான 5 நாள் வேலைத் திட்டம் குறித்துத் தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் போராட்டத்தை வாபஸ் பெற யூனியன்கள் மறுத்துவிட்டன.

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை மற்றும் நேரடி பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 11 போராட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் என வங்கி சங்கங்கள் எச்சரித்துள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UFBU Calls for Nationwide Bank Strike on September 11 Over 5-Day Work Week and Pension Demands


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->