ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வசூல் சாதனை: கடந்த ஆண்டில் ரூ.1,420 கோடி உண்டியல் காணிக்கை வசூல்!
Tirupati Temple Records Rs 1420 Crore Hundi Collection A Massive Surge in Devotee Offerings
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் உண்டியல் காணிக்கை வசூல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.1,420 கோடி எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.120 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது, இது கோவிலின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் வெளிநாட்டுக் கரன்சிகளையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
முந்தைய ஆண்டுகளில் (2023-2025) ஒரு நாளைக்குச் சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், உண்டியல் வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 13.95 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்தான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 11, 2026), ஒரே நாளில் 81,288 பக்தர்கள் ஏழுமலையானைச் தரிசனம் செய்துள்ளனர். இதில் 34,892 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய ஒரு நாள் உண்டியல் வசூல் மட்டும் ரூ.3.43 கோடியைத் தாண்டியுள்ளது.
கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் தொடங்கிவிட்டதால், திருப்பதியில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்ம தரிசனம் எனப்படும் நேரடி இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தடையின்றி அன்னப்பிரசாதம் மற்றும் பால் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முன்பதிவு வசதிகள் இருந்தாலும், நேரடியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. வரும் வாரங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப கூடுதல் நிழற்குடை வசதிகளையும், குளிர்ச்சியான குடிநீர் விநியோகத்தையும் உறுதி செய்ய அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
English Summary
Tirupati Temple Records Rs 1420 Crore Hundi Collection A Massive Surge in Devotee Offerings