"அமெரிக்கா மீது இனி எந்த வரியும் இருக்காது - உறுதியளித்த இந்தியா"!
There will be no more tariffs on America India promises
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரிகள் விதித்து வருகின்றன என கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “சீனா எங்களை வரிகளால் கொல்கிறது, இந்தியா எங்களை வரிகளால் கொல்கிறது, பிரேசில் எங்களை வரிகளால் கொல்கிறது” என்று குற்றச்சாட்டு முன்வைத்தார்.
அவர் தொடர்ந்து, “உலகத்தில் எந்த மனிதருக்கும் விட வரிகளைப் பற்றி எனக்கு தான் மிக நன்றாகத் தெரியும். இந்தியா தான் உலகில் அதிக வரி விதிக்கும் நாடு. இந்திய சந்தையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக அளவு சுங்கவரி விதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது, அமெரிக்கா மீது இனி எந்த வகை வரியும் இருக்காது என்று இந்திய அரசு உறுதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் டிரம்ப், இந்த நிலைமை உருவானதற்குக் காரணம் தாம் கடுமையான வரி கொள்கைகளை பின்பற்றியது தான் என்றும் வலியுறுத்தினார். “இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு இல்லையென்றால் அவர்கள் இந்த முடிவுக்கு வர முடியாது. அமெரிக்காவின் வரி விதிப்பு தான் எங்களுக்கு பேரம்பேசும் சக்தியை அளிக்கிறது. இதன் மூலம் தான் அமெரிக்காவுக்கு சாதகமான ஒப்பந்தங்களை உருவாக்க முடிகிறது” என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் இந்தக் கருத்துக்கள், வரவிருக்கும் அமெரிக்கா–இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஜி.எஸ்.டி. மாற்றங்கள் மற்றும் வரிச்சலுகைகள் மூலம் இந்திய அரசு உள்நாட்டு சந்தையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிக்கைகள், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் வணிக வட்டாரங்கள், இந்தியாவுடனான வர்த்தகத்தில் சமநிலை நிலைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. டிரம்பின் கூற்றின்படி, இந்தியா இனி அமெரிக்கா மீது கூடுதல் சுங்க வரி விதிக்காது என்பதுதான் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்கா–இந்தியா வர்த்தக உறவுகள் புதிய பாதையில் செல்லும் சாத்தியம் அதிகரித்து வருவதாக பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
English Summary
There will be no more tariffs on America India promises