'மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'; பிரதமருக்கு சவால் விட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ்..!
The Trinamool Congress has challenged the Prime Minister to release a white paper on the financial allocations made to the state of West Bengal
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாகவும், பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். அத்துடன், மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது என விமர்சித்திருந்தார்.
அத்துடன், "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வங்காளத்தின் அரசியல் களத்தில் ஒரு உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தடை ஏற்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த பாஜக அரசாங்கம் வரும்போதுதான் வங்காள மக்களுக்கு உண்மையான நலன் ஏற்படும் என்றும் பேசியிருந்தார்.
மேலும், இந்த நாட்டின் முதன்மை ஊழியராக நான் வங்காள மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய முயற்சிக்கிறேன் என்றும், இந்த மாநிலத்தில் உள்ள வீடற்ற மக்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிரந்தர வீடுகளைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய அரசு ஏழை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்காகத் தொடங்கியுள்ள நலத்திட்டங்களின் முழுப் பலன்களையும் நீங்கள் பெற வேண்டும் என்று விரும்புவதாகவும், ஏனென்றால் அவற்றுக்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அது மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை. இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் கொடுமையானது மற்றும் இரக்கமற்றது. ஏழைகளுக்காக மத்திய அரசால் அனுப்பப்பட்ட நிதியை இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொள்ளையடிக்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அவர்கள் வங்காளத்தின் ஏழை மக்களின் எதிரிகள். அவர்கள் உங்கள் கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் கஜனாவை நிரப்புவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.
பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனது அரசாங்கம் மேற்கு வங்காளத்திற்காக என்ன செய்தது அல்லது என்ன செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறது என்பது பற்றி, புனைகதைகளைக் கூறி கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பிரதமர் பேசினார். ஆனாலும், அவர் ஒரு எரியும் உண்மையை தவிர்த்துவிட்டார்.
2021 மாநில தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அரசியல் சுற்றுலாப் பயணி நரேந்திர மோடி, வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார். அப்படியா?
அப்படியானால், மத்திய அரசு ஏன் வங்காளத்தின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான ரூ.24,275 கோடியை வன்மத்துடன் நிறுத்தி வைத்துள்ளது? 2021 சட்டமன்றத் தேர்தலில் அவமான தோல்விக்குப் பிறகு, வங்காளத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எங்கள் பகிரங்க சவாலை மோடி அரசாங்கம் ஏன் நிராகரித்துள்ளது?.
மாநிலத்தில் கிராமப்புற வீட்டுவசதிக்கான மத்திய அரசின் நிதியை முடக்கியதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்காக தனது சொந்தக் கருவூலத்திலிருந்து ரூ. 30,000 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
English Summary
The Trinamool Congress has challenged the Prime Minister to release a white paper on the financial allocations made to the state of West Bengal