வாரிசு நடிகர் தனியான அடையாளம் கிடைக்கவில்லை!தனிமையை உணர்ந்தேன்! மனம் திறந்த விக்ரம் பிரபு!
The heir apparent of the actor has not found a unique identity I felt lonely Vikram Prabhu opened up
தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான அவர், வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமா பயணத்தில் சந்தித்த தனிமை மற்றும் சவால்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவான “சிறை” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2025 டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 75 நாட்களைத் தாண்டியும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையொட்டி நடைபெற்ற வெற்றி விழாவில் விக்ரம் பிரபு தனது அனுபவங்களை பகிர்ந்தார்.
அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு முறையும் கேமரா முன் நிற்கும்போது என் தாத்தா சிவாஜி கணேசன் மற்றும் என் அப்பா பிரபு ஆகியோர் சினிமாவில் பெற்றிருந்த பெருமையை நான் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய பொறுப்பும் ஒரு பயமும் என்னை சுற்றி நிற்கும். அந்த உணர்வு என்னை பல நேரங்களில் தனிமையாக உணரச் செய்துள்ளது,” என்று கூறினார்.
2012 ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு, முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றார். அதன் பின்னர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளையாணை, பொன்னியின் செல்வன், இறுகப்பற்று போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக “டாணாக்காரன்” திரைப்படத்தில் போலீஸ் பயிற்சி பெறும் இளைஞன் எதிர்கொள்ளும் சவால்களை அவர் வெளிப்படுத்திய விதம் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்துக்கு மாநில விருதும் கிடைத்தது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியபோது, தனது தந்தை பிரபு நேரடியாக உதவி செய்யாமல், “உன் முயற்சியால் நீ வெற்றி பெற வேண்டும்” என்று கூறியதாகவும் விக்ரம் பிரபு தெரிவித்தார். அதன் பிறகு தானாக முயற்சி செய்து இதுவரை 25 திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“நான் வாரிசு நடிகன் என்பதால் எனக்கு தனியான அடையாளம் கிடைக்கவில்லை என்ற உணர்வு பல நேரங்களில் இருந்தது. ஆனால் என் சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்பதே என் நோக்கம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “சிறை” திரைப்படம் தனது 25வது படம் என்பதால் அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது என்றும், அந்த வெற்றியை நண்பர்கள் மற்றும் படக்குழுவுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் விக்ரம் பிரபு கூறினார்.
English Summary
The heir apparent of the actor has not found a unique identity I felt lonely Vikram Prabhu opened up