அஜித் பவார் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்; முதலமைச்சரிடம் சுனேத்ரா பவார் கோரிக்கை..!
Sunetra Pawar requests CBI probe into Ajit Pawars plane crash
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தவர் அஜித் பவார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி, விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது மனைவி சுனேத்ரா பவார் அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் சென்றார். அப்போது பாராமதியில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியை யார் ஏற்பார்..? அடுத்த துணை முதலமைச்சர் யார் எனும் கேள்விகளும் எழுந்தன.
இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி, சுனேத்ரா பவாரைச் சந்தித்து, கட்சியின் தலைவராக அவரை பதவி ஏற்க அழைப்பு விடுத்தனர். அத்துடன், மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்பின்னர், அஜித் பவாரின் மனைவி, சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட்டார். அவருக்கு மும்பை லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது, அஜித் பவாரின் விமான விபத்து குறித்து விசாரிக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது விமான விபத்துகள் புலனாய்வு பிரிவு இந்த விபத்தை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும் அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, அஜித் பவார் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Sunetra Pawar requests CBI probe into Ajit Pawars plane crash