கோடீஸ்வர குடும்பங்களை கொண்ட மாநிலங்களில் தமிழகம் எந்த இடம்..? முதலிடத்தில் மஹாராஷ்டிரா..!
States with millionaire families in India
இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்வச் செழிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 04.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை (நிகர மதிப்பு = ரூ. 8.5 கோடி) 2025-ஆம் ஆண்டில் 90 சதவீதம் அதிகரித்து 08.71 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு -2025 வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் செல்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. 01.78 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட மாநிலமாக மஹாராஷ்டிரா முன்னணியில் உள்ளதாகவும், அதை தொடர்ந்து டில்லி 79,800 குடும்பங்களுடன் தொடர்ந்து வருகிறது. இதில், தமிழகம் (72,600), கர்நாடகா (68,800), குஜராத் (68,300) ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் இருந்த போதிலும் இந்தியாவில் வலுவான செல்வ உருவாக்கத்தை இந்த நிலவரம் காட்டுகிறது. நாட்டில் 01.42 லட்சம் பணக்கார குடும்பங்களுடன் மும்பை நாட்டின் கோடீஸ்வர தலைநகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து டில்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) நகரங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், டிஜிட்டல் பணம் செலுத்துதல் (35சதவீதம் யுபிஐ பயன்பாடுகள்), பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளை கோடீஸ்வரர்கள் அதிகம் விரும்புவதாக கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன. ரோலக்ஸ், தனிஷ்க், எமிரேட்ஸ் மற்றும் ஹச்டிஎப்சி வங்கி ஆகியவை பிராண்ட் தேர்வுகளில் முதலிடத்தில் உள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர் இது குறித்து கூறியதாவது: இந்தியாவின் செல்வ உருவாக்கம் உண்மையானது மற்றும் மீள்தன்மை கொண்டது என்றும், இந்த குறியீடு இந்தியாவின் பணக்கார வர்க்கத்தின் துடிப்பையும் அதன் வளர்ந்து வரும் ஆடம்பர நுகர்வு முறைகளையும் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
English Summary
States with millionaire families in India