ரூ.50 கோடி காப்பீட்டுக்காக குடும்பத்தினரை விபத்தை ஏற்படுத்திய மகன்: 04வது மனைவியால் வெளிவந்த உண்மை..!
Son who caused an accident to his family for Rs 50 crore insurance
ரூ.50 கோடி காப்பீட்டுப் பணத்திற்காக தாய், தந்தை மற்றும் முதல் மனைவியை அடுத்தடுத்து கொலை செய்துள்ள நபரின் கொடூர செயல் குறித்து அவரது நான்காவது மனைவி அம்பலப்படுத்தியுள்ளமை பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்தவர் விஷால் சிங்கால் என்பவர் (37) வயது. இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அதிக மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டங்களை எடுத்துள்ளார். பின்னர் அவர்களை சாலை விபத்துகளில் சிக்க வைத்து கொலை செய்து, காப்பீட்டுப் பணத்தை பெற்று வந்துள்ளார்.
அதன்படி, தனது முதல் மனைவி மற்றும் தாயை ஏற்கெனவே இதேபோல கொலை செய்து, ரூ.1.5 கோடி காப்பீட்டுப் பணத்தைப் பெற்றுள்ளார். மேலும், கடந்த மார்ச் மாதம் தனது தந்தை முகேஷையும் சாலை விபத்தில் சிக்க வைத்து கொலை செய்துள்ளார். தனது தந்தையின் பெயரில் மட்டும் 64 காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ரூ.50 கோடி பெற அவர் திட்டமிட்டுள்ளார்.

தந்தை விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்பட்ட நேரத்திற்கும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் இடையே இருந்த பெரும் முரண்பாடுகளைக் கொண்டு காவல்துறையினர் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், விஷாலின் நான்காவது மனைவியான ஸ்ரேயா, தனது பெயரிலும் அதிக மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டங்களை எடுக்க விஷால் வற்புறுத்தியதால் சந்தேகமடைந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பல் பகுதியில் இதேபோன்ற காப்பீட்டு மோசடி குறித்து காவல்துறை விசாரித்து வருவதை செய்திதாள்களில் படித்த அவர், தனது கணவரின் குடும்பத்தில் நடந்த தொடர் மரணங்களையும் அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்.

கணவர் மீதான சந்தேகம் வலுவான நிலையில், இதுகுறித்து மீரட் காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், சம்பல் பகுதி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண காந்த் பிஷ்னோயைத் தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே இது போன்ற மோசடிகளை விசாரித்து வந்த காவல்துறையினர், ஸ்ரேயாவின் தகவலையடுத்து தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனையடுத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள், வங்கிப் பதிவுகள் மற்றும் ஆதாரங்களை வைத்து, விஷால் தான் இந்த விபத்துகளை அரங்கேற்றி மோசடியில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, விஷால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஒருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் மனைவி மற்றும் தந்தை உயிரிழந்த மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் இந்தச் சதியில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
English Summary
Son who caused an accident to his family for Rs 50 crore insurance