சென்னை-டெல்லி விமானத்தில் சர்ச்சை: பெண் பணியாளருக்கு தொந்தரவு…! - திமுக கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது
Controversy Chennai Delhi flight Female flight attendant harassed 2 people including DMK councilor arrested
திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கவுன்சிலராக செயல்பட்டு வருபவர் பிரபாகரன். இவரின் நெருங்கிய நண்பரான தியாகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கு மாவட்ட நிர்வாகியாக உள்ளார்.
அரசியல் ரீதியாக வேறு வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரும் நட்புறவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மாதம் 25-ஆம் தேதி, இருவரும் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தனர்.

அந்தப் பயணத்தின் போது இருவரும் மது போதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், விமானத்தில் பணியில் இருந்த 25 வயது பெண் பணியாளரிடம் தொடர்ந்து சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை கேட்டு கேலி செய்ததோடு, வார்த்தை எல்லையை மீறி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணைத் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விமானம் டெல்லி சென்றடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண் தனது மேலதிகாரிகளிடம் சம்பவத்தை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மகளிர் காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தனர்.இதையடுத்து, பிரபாகரன் மற்றும் தியாகுவிடம் காவலர்கள் விசாரணை நடத்தி, மேல் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால் அவர்கள் ஆஜராகாததால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இருவரும் டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பியதை அறிந்த காவலர்கள், விமான நிலையத்திலேயே அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Controversy Chennai Delhi flight Female flight attendant harassed 2 people including DMK councilor arrested