'பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்'; டெல்லி ஏஐ மாநாட்டை பாராட்டிய சசி தரூர்..!
Shashi Tharoor praises Delhi AI conference
கடந்த 16 ஆம் தேதி டெல்லியில், தொடங்கிய ஏஐ மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் நேற்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர். முக்கியமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கலந்து கொண்டார்.
அதேபோன்று இன்றைய நிகழ்வில் ஸ்பெயின் பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் கால்கோடியாஸ் பல்கலைக்கழகம், சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக தவறுதலாக காட்சி படுத்தியது. அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளது. ஆனால், சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதாக காங்கிரஸ் ராகுல் காந்தி விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் முதல் சில நாட்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பல திருடுபோனது மற்றும் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காதது உள்ளிட்ட சில குளறுபடிகள் ஏற்பட்டன. இதற்கு எதிர்பார்த்ததை விட அதிகளவில் நபர்கள் வந்ததால் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடந்ததாக கூறப்பட்டது.
இதேவேளை, காங்கிரஸ் தலைவர் கார்கே, மாநாட்டின் நிர்வாகச் சீர்கேடுகள் நாட்டுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாக விமர்சித்துள்ளார். அத்துடன், பார்வையாளர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி கூட முறையாக இல்லை என்றும், மோடியின் விளம்பர ஆசையால் மாநாடு சீர்குலைந்துள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே இளைஞர் காங்கிரசார் இன்று மாநாடு திடலில் புகுந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் சட்டையை கழற்றி அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி, பதற்றத்தை ஏற்படுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஏ.ஐ. மாநாட்டைப் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டியுள்ளார். அதாவது, "முதல் சில நாட்கள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்காக உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருப்பது பாராட்டுக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாநாட்டின் ஏற்பாடுகளில் நிலவிய சில குழப்பங்கள் குறித்துக் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்' என்று குறிப்பிட்டுள்ளார். சசி தரூரின் கருத்துக்கு மாறாக, ராகுல் காந்தி இந்த மாநாட்டை ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படும் விளம்பர கூத்து என்று சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Shashi Tharoor praises Delhi AI conference