வாக்காளர் திருத்தப் பணிகளை ஒத்திவைக்கக் வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு!
SC SIR Kerala Govt
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனுவில், உள்ளாட்சித் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு, SIR பணிகளை ஒரே நேரத்தில் நடத்துவது நிர்வாக சவால்களையும் தடையையும் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விவரங்கள்: கேரளாவில் மொத்தம் 1,200 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன, இதில் 23,612 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.
பணி நெருக்கடி: உள்ளாட்சித் தேர்தலை நடத்த 1,76,000 பணியாளர்களும், SIR பணிகளுக்குக் கூடுதலாக 25,668 பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். இந்த நிர்வாகப் பணிச் சுமை மாநில அரசின் வழக்கமான வேலைகளைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
காலக்கெடு பாதிப்பு: SIR பணி நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. முழுத் திருத்தத்தையும் செயல்படுத்த ஒரு மாத காலமே இருப்பதால், இது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளைப் பாதிக்கும் எனக் கேரள அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாகக் கட்டாயம் இல்லை என்றும், இதற்கான சிறப்பு காரணங்களை ECI தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றம் முன்னதாகத் தடை விதிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த SIR வழக்குகளை நவம்பர் 26-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.