ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை: ஆயுதம் தாங்கிய கும்பல் துணிகர செயல்: அறையில் தூங்கியவரின் தலைமாட்டில் கம்மியுடன் நின்ற கொள்ளையன்..!
Robbery at the house of a retired judge in Madhya Pradesh
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கார்க் வீட்டில் நேற்று அதிகாலை மூன்றரை மணியளவில், ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உள் நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தையும் குறித்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பேர் அடங்கிய இந்த கும்பல் வெறும் நான்கு நிமிடங்கள் பத்து விநாடிகளில் இந்தக் கொள்ளையை சம்பவத்தில் ஈடுப்பட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். வீட்டில் பாதுகாப்புக் காவலர் மற்றும் எச்சரிக்கை மணி வசதி இருந்தும், கொள்ளையர்கள் பிரதான வாயிலைத் தாண்டி, ஜன்னல் கம்பிகளை அறுத்துக்கொண்டு வீட்டிற்குள் எளிதாக நுழைந்துள்ளனர்.

ஆனால், இது பாதுகாப்புக் காவலரின் கவனத்திற்கு செல்லாத நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் கார்க்கின் மகன் ரித்திக் உறங்கிக்கொண்டிருந்த அறையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளமை பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்களில் இருவர் அறைக்குள் நுழைய, மற்றொருவர் வெளியே காவலுக்கு நின்றுள்ளார். அறைக்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த அலமாரியிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, மற்றொருவன் உறங்கிக் கொண்டிருந்த ரித்திக்கின் அருகே இரும்புக் கம்பியுடன் நின்றுள்ளான்.
இவர்கள் கொள்ளை அடிக்கும் போது சத்தம் கேட்டு, ரித்திக் ஒருவேளை விழித்துக்கொண்டால், உடனடியாக அவரைத் தாக்குவதற்காக அவ்வாறு கையில் கம்பியுடன் நின்றுள்ளான். அந்த நேரத்தில் வீட்டில் பாதுகாப்பு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. ஆனாலும் ரித்திக் எழுந்திருக்கவில்லை.

இந்நிலையில், ரித்திக் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாரா அல்லது கொள்ளையர்களுக்குப் பயந்து உறங்குவது போல நடித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அடுத்து, மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ரித்திக்கின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துத் தெரிய வரவில்லை.
அத்துடன், ஒரே நாளில் அப்பகுதியில் உள்ள பல வீடுகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால், இது திட்டமிட்டுச் செயல்படும் கொள்ளைக் கும்பலின் செயலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி உமாகாந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் வீட்டில் இப்படி கொள்ளை சம்பவம் நடந்துள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
English Summary
Robbery at the house of a retired judge in Madhya Pradesh