மலேசிய பொறியாளர் தற்கொலை வழக்கு; தலைமை தேர்தல் ஆணையரிடம் விசாரணை; கேரள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதலா..!
Ramesh Chennithala has called for an inquiry involving the Chief Election Commissioner regarding the suicide case of a Malaysian engineer
மலேசிய பொறியாளர் தற்கொலை வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ், எம்.சி. சாலையை மேம்படுத்தும் பணிகளை பிரபல கூட்டு நிறுவனம் மேற்கொண்டது. அப்போது மாநில பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் பதவி வகித்தார். அப்போது அந்த பணிகளை கவனித்து வந்த மலேசியாவை சேர்ந்த சிவில் இன்ஜினியர் லீ சீ பீன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் தற்கொலை கடிதத்தில் ஞானேஷ் குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையானது, அதிகார மட்டத்தின் கடும் அழுத்தம் காரணமாக பாதியிலேயே திட்டமிட்டு முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த விவகாரம் தற்போது ஞானேஷ் குமார் மீதான சர்ச்சைகள், அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
தற்போது பழைய கோப்புகளை உடனடியாக வரவழைத்த கேரள காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, வழக்கை திசைதிருப்பிய விவகாரம் தொடர்பாக விரிவான மறுவிசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தெரிவித்துள்ளதாவது; வெளி அழுத்தங்கள் காரணமாக விசாரணை முடக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் விபரீதமானது. எனவே இந்த முறைகேடுகள் குறித்து தீவிரமாக விசாரித்து, உண்மை பின்னணியை வெளிக்கொண்டு வந்து பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ளவர் மீது ஊழல் தடுப்பு விசாரணை பாய்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
English Summary
Ramesh Chennithala has called for an inquiry involving the Chief Election Commissioner regarding the suicide case of a Malaysian engineer