போராட்டக்காரர்களை தூண்டிவிடும் ட்ரம்ப்; ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்; அமெரிக்காவுக்கு கத்தார் எச்சரிக்கை..!
Qatar warns that war will break out if the US attacks Iran
ஈரானில் பணவீக்கம் அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி மோசமாக உயர்வடைந்துள்ளது. இதனை சமாளிக்க முடியாத அந்நாட்டு மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியதில் பலரும் பலியாகியுள்ளனர். போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்கல் வன்முறையாக வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். அத்துடன், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு கூறியுள்ளதாவது:

''ஈரானிய தேச பக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள்.. உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்..! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள். போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது. அத்தோடு, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி பேசியதாவது;
''ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும். தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Qatar warns that war will break out if the US attacks Iran