தனுஷ் பட ஷூட்டிங்கில் நடந்த சங்கடம் – பீரியட்னுகூட பார்க்கல.. நடிகை பார்வதி ஓபன் டாக்!
The embarrassment that happened during the shooting of Dhanush film I canot even watch my period Actress Parvathy opens up
நடிகை பார்வதி திருவோத்து தமிழில் அதிக படங்களில் நடித்திருக்காவிட்டாலும், அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவை. அதனாலேயே அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவைத் தாண்டி, மலையாள திரையுலகிலும் மிகுந்த கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக பார்வதி இருக்கிறார். இந்த நிலையில், தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த ஒரு சங்கடமான அனுபவத்தை அவர் சமீபத்தில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
மலையாள திரையுலகத்தில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய பார்வதி, தமிழில் சசி இயக்கிய ‘பூ’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ‘மாரி’ என்ற கதாபாத்திரத்தில் பார்வதி வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு, ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது. படமும் சூப்பர் ஹிட்டானதால், பார்வதி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
வாய்ப்புகள் வந்தபோதும், கதைகளைத் தேர்வு செய்வதில் பார்வதி மிகவும் நிதானமாக இருந்தார். இதன் காரணமாக அவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த அந்தக் கதாபாத்திரங்கள் காலத்தைக் கடந்து பேசக்கூடியவையாக அமைந்தன. மலையாளத்தில் அவர் பெற்ற புகழ் அதைவிட அதிகம். அங்கு தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த பார்வதி, அந்தப் படத்தில் நடிப்பில் விக்ரமுக்கு இணையாக பாராட்டுகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கலானுக்குப் பிறகு, சில தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளதாகவும், சிலவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பார்வதி என்றாலே, தனது கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் நடிகை என்ற பெயர் உண்டு. சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அவர் வெளிப்படையாகக் குரல் கொடுப்பவர். ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தில் கூட, பலர் மௌனம் காத்தபோது, பார்வதி தெளிவாகவும் கடுமையாகவும் தனது கருத்துகளை பதிவு செய்தார்.
இந்தச் சூழலில், ‘மரியான்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“மரியான் படத்தில் ஒரு காதல் காட்சிக்காக முழுவதுமாக தண்ணீரில் நனைந்தபடி நடித்தேன். உடை மாற்றிக்கொள்ள வேறு டிரெஸ் எதையும் எடுத்துச் செல்லவில்லை. ஒரு கட்டத்தில் உடை மாற்ற ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது, அதற்கும் அனுமதி தரவில்லை. அப்போது எனக்கு பீரியட் இருப்பதால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சத்தமாக சொல்ல வேண்டிய நிலை வந்தது. அதற்குப் பிறகுதான் அனுமதி கிடைத்தது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னையும் சேர்த்து மூன்று பெண்கள் மட்டுமே இருந்தோம். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக யாருமே இல்லை” என்று பார்வதி கூறியுள்ளார்.
இந்த அனுபவம், படப்பிடிப்பு தளங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில், இத்தகைய சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொண்டு, வெளிப்படையாகப் பேசும் பார்வதியின் மனவலிமையையும் இந்தப் பேச்சு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
English Summary
The embarrassment that happened during the shooting of Dhanush film I canot even watch my period Actress Parvathy opens up