மீண்டும் இணைந்த கரகாட்டக்காரன் ஜோடி! பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜனை சந்தித்த நடிகை கனகா!
The Karakattakaran couple reunited Actress Kanaka meets Ramarajan after many years
குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து, 90-களில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் நடிகை கனகா. நடிகை தேவிகாவின் மகளான அவர், ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘அதிசய பிறவி’ படத்தில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து ‘தங்கமான ராசா’, ‘பெரிய வீட்டுப் பண்ணக்காரன்’, ‘கும்பக்கரை தங்கய்யா’, ‘தாலாட்டு கேக்குதம்மா’, ‘சாமுண்டி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த கனகா, மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் அவர் பிஸியாக நடித்தார். குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த ‘காட்ஃபாதர்’ திரைப்படம் 400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மோகன்லால், மம்முட்டி, ரஜினி, பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கனகா.
ஆனால், சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்திலேயே, அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்தது அம்மா தேவிகாவின் மறைவு. அந்த துயரத்திலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாத கனகா, மெதுவாக சினிமாவிலிருந்து விலகி, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்து வந்தார். இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பலவிதமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
அண்மையில் நடிகை குட்டிபத்மினி, கனகாவை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசிய புகைப்படத்தை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் கனகா முன்பைவிட முற்றிலும் மாறிய தோற்றத்தில் இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்தச் சூழலில், தற்போது நடிகை கனகா, தனது முதல் படமான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் ராமராஜனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்த அந்த தருணத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்த இந்த சந்திப்பு, கனகா மீண்டும் வெளியில் வரத் தொடங்கியிருக்கிறாரோ என்ற நம்பிக்கையையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படம், கனகாவை மீண்டும் ஒருமுறை திரையில் காண வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் ஆசையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
English Summary
The Karakattakaran couple reunited Actress Kanaka meets Ramarajan after many years