விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளது; பிரதமர் மோடி..!
Prime Minister Modi says space startups have faith in the government
விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 20 விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடனான உரையாடலின் போது பேசிய பிரதமர் மோடி மேலும் கூறியதாவது;
''ஒரு புதிய துறையில் நீங்கள் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நாம் எடுக்கும் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே எப்போதும் எனது நிலைப்பாடு.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவற்றை நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கக் கூடாது எனவும், அப்போதுதான், புதிய முயற்சி எடுக்க முன்வருபவர்கள் ஒருவித உறுதியை உணர முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, தங்கள் சொந்தத் தவறால் ஏதேனும் தவறு நடந்தால் அது வேறு விஷயம், ஆனால், யாரும் அவர்களைக் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அந்த நம்பிக்கையைத்தான் நாங்கள் உருவாக்க முயற்சிக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேலும், இந்தத் துறையில் தங்கள் வாழ்க்கையை உருவாக்க விரும்பும் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள், இந்தியாவிற்கு வந்து ஒரு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனத்திலோ அல்லது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலோ (ISRO) இணைய வேண்டும் என்று நினைக்கும் வகையிலான ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காந்தம் போல இந்தத் திறமையாளர்கள் அனைவரையும் நம்மால் ஈர்க்க முடியும் என்றும், அது நமக்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், செலவு அடிப்படையில் நாங்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறோம் எனவும், நம் திறமையில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், நம் நாட்டு மக்களிடம் இயல்பாகவே இடர் ஏற்கும் திறன் அதிகமாக இருப்பதால், இத்துறையில் நமக்கென ஒரு தனித்துவமான இடத்தை விரைவாக உருவாக்கிக்கொள்ள முடியும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விண்வெளித் துறை நிறுவனங்களுக்கும் பிற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே அதிக அளவிலான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்றும், விண்வெளி குப்பைகளை அகற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறைகளுடன் இணைந்து விவசாயிகளுக்குச் சிறந்த முடிவுகளை எடுக்கவும் விளைச்சலை அதிகரிக்கவும் உதவலாம் என்றும் பிரதமர் மோடி 20 விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடனான உரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi says space startups have faith in the government