பெங்களூரு ஓட்டலில் போலீஸ் மிரட்டல்...? பதற்றத்தில் பால்கனியிலிருந்து குதித்த 21 வயது இளம்பெண்...!
Police threat Bengaluru hotel 21 year old woman jumped from balcony panic
கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், தனது நண்பர்கள் உட்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர்கள் முன்கூட்டியே 3 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர்.
அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் ஓட்டலுக்கு சென்று அறைகளில் தங்கினர்.இரவு நேரத்தில் அந்த அறையில் அதிக சத்தத்துடன் இசை ஒலித்து நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இதனால் அருகிலிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதால், அவர்கள் எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக ஓட்டலுக்கு சென்று அந்த அறைக்குள் நுழைந்து விசாரணை நடத்தினர்.அப்போது விருந்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களிடம் போலீசார் கடுமையாக நடந்து, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் வழங்காவிட்டால் கைது செய்வோம் எனவும் எச்சரித்ததாக தெரிகிறது.
அச்சமடைந்த அவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் ரொக்கமாக மட்டுமே பணம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.இதையடுத்து, அங்கிருந்த ஒரு வாலிபர் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.
இந்த இடைவெளியில் ஏற்பட்ட போலீசாரின் மிரட்டல் மற்றும் மன அழுத்தத்தால் பதற்றமடைந்த இளம்பெண், ஓட்டல் அறையின் பால்கனிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
இதில், அவர் ஓட்டல் சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் சிக்கி, தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் அடைந்தார்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை நண்பர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பணம் பறிக்க முயன்றதாக கூறப்படும் போலீசார் குறித்தும் தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police threat Bengaluru hotel 21 year old woman jumped from balcony panic