அள்ள அள்ள தங்கம்..! மொத்தம் 20 டன் தங்கம்... ஒடிஷாவின் 4 இடங்களில் தங்க சுரங்கம்!
Odisha Gold Mining
ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மண்ணுக்குள் மறைந்துள்ள கனிமங்களை ஆராய இந்திய தொல்லியல் துறை ஆராட்சி நடத்தியது.
இந்த ஆய்வில் தியோகர், சுந்தர்கர், நபரக்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் பகுதிகளில் தங்கச் சுரங்கக் கனிமங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் மயூர்பன்ச், மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் மாவட்டங்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஒடிசா மாநிலம் தங்கச் சுரங்க உற்பத்தி மையமாக உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சுமார் 10 முதல் 20 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசாவில் தங்கம் இருப்பதை அங்கு சுரங்கத்துறை அமைச்சர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்திருந்தார். இதையடுத்து, தங்கச் சுரங்கங்களை ஏலம் விடும் நடவடிக்கை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஆண்டுதோறும் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் தங்கம் வெறும் 1.6 டன்கள் மட்டுமே. இந்நிலையில், ஒடிசாவில் சுரங்கத் தோண்டுதல் ஆரம்பமானால், உள்நாட்டு தங்க உற்பத்தி கணிசமாக உயரும், அதனால் இறக்குமதிப் பொறுப்பும் குறையும்.
முதல் கட்டமாக தியோகர் பகுதியில் தங்கச் சுரங்கம் ஏலத்திற்கு விடப்படும். இதற்கான பணிகளை ஒடிசா அரசு, ஒடிசா சுரங்கக் கழகம் மற்றும் தொல்லியல் துறை இணைந்து விரைவாக முன்னெடுத்து வருகின்றன. இந்த முயற்சி, மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, வேலை வாய்ப்பையும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்துதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.