மானிய 'காஸ்' சிலிண்டருக்கு ஆதார் சரிபார்ப்பு; அக்.1 முதல் புதிய நடைமுறை அமல்: பதிவை சரிபார்க்காதவர்களுக்கு சிலிண்டர் கிடைக்காது..?
New procedure for Aadhaar verification for subsidized gas cylinders comes into effect from October 1
மானியம் உடனான சமையல் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டிற்கு சட்டவிரோதமாக திருப்பி விடப்படுவதைத் தடுக்கவும், போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நுகர்வோரின் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த பணிகளை முடிக்க முதலில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்டு 15, ஆகஸ்டு 23, ஆகஸ்டு 31, செப்டம்பர் 7 மற்றும் இறுதியாக செப்டம்பர் 14-ஆம் தேதி வரை பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சலுகை சென்று சேர்வதை உறுதிசெய்யும் வகையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய ஆதார் கைரேகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நடைமுறையை முடிக்காத நுகர்வோர், தங்களின் ஆதாரை சரிபார்த்த பிறகே மானிய சிலிண்டர்களை பதிவு செய்ய முடியும். அதேநேரம் ஆதார் அங்கீகாரம் செய்ய விரும்பாத அல்லது முடியாத வாடிக்கையாளர்களும் சந்தை விலையில் மானியமின்றி சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் 05 கிலோ அல்லது 10 கிலோ எடையுள்ள சிலிண்டர்களைப் பெற எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், செல்போன் செயலிகள், வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி குரல் பதிவு வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள 03 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இதுவரை 12 கோடிக்கும் அதிகமான செல்போன் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
பயனாளிகள் தங்கள் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் போதோ, விநியோகஸ்தர் அலுவலகத்திலோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் பிரத்யேக செல்போன் செயலிகள் மூலமாகவோ இந்த சரிபார்ப்பை செய்து கொள்ளலாம். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நேற்றைய நிலவரப்படி 27.43 கோடி வாடிக்கையாளர்கள், அதாவது மொத்த நுகர்வோரில் 89.9 சதவீதம் பேர் தங்களது ஆதார் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும், சமையல் காஸ் விலையை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டுக்குள் வைத்திருக்க அரசு பெருமளவு நிதி உதவியை வழங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 721 ரூபாயாக இருந்த 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கான மறைமுக மானியம், நடப்பு செப்டம்பர் மாதத்தில் சுமார் 210 ரூபாயாக இருந்தது.
எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்ய கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 22 ஆயிரம் கோடி ரூபாயும், 2025-26-ஆம் மற்றும் 2026-27-ஆம் நிதியாண்டுகளில் தலா 30 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி 62 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
மானியக் கசிவைத் தடுக்கவே இந்த சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், ‘தகுதியுள்ள நுகர்வோர் அக்டோபர் 1ந் தேதிக்குள் ஆதார் பதிவை முடித்து தடையற்ற சேவையைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர். சந்தேகங்களுக்கு 1800 2333 555 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.
English Summary
New procedure for Aadhaar verification for subsidized gas cylinders comes into effect from October 1