தேசிய அளவில் 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25% க்கு அதிகமான இளைஞர்கள் கல்வி, வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர்; மாணிக்கம் தாகூர்..!
Manickam Tagore states that in over 250 districts across the country more than 25 Percentage of the youth are left idle without education or employment
தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாயார் துரோகத்திற்கு இந்திய இளைஞர்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்க தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
''2014ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவோம் என்று இளைஞர்களிடம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
12 ஆண்டுகளில் 24 கோடி பேருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிாித்தாடுகிறது.
கடந்த ஆகஸ்ட் 2026 இல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்பதும், 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது.
படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவிகித பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும், பட்டம் பெற்ற பெண்களிடம் 20.4 சதவிகித வேலையின்மை நிலவுவதும் மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே போகவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார நெருக்கடி. தற்போது செப்டம்பர் 2026 இல் மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவில் மேலும் அம்பலமாக்கியுள்ளது.
நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவிகித பகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித வேலை வாய்ப்பின்றி எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும் புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முதன்மை நகரான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவிகிதமாக விஸ்வரூபமெடுத்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவிகிதம், திருச்சியில் 23.9 சதவிகிதம், மதுரையில் 23.8 சதவிகிதம், சென்னையில் 22.4 சதவிகிதம் என இளைஞர்கள் முறையான வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து முடங்கியுள்ளனர்.
கிராமப்புறத் தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காமல், 30.4 சதவிகித குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.
தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது, மோடி அரசில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உரிய பாடத்தை இந்திய இளைஞர்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.'' என்று மாணிக்கம் தாகூர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Manickam Tagore states that in over 250 districts across the country more than 25 Percentage of the youth are left idle without education or employment