நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: சிபிஐ வலையில் சிக்கிய ₹100 கோடி அதிபர்!
NEET Paper Leak Case CBI Arrests Coaching Tycoon as Massive Network Unravels
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இந்த முறைகேடு குறித்து, மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் டூ கேரளா: பல லட்சத்திற்கு விற்கப்பட்ட வினாத்தாள்:
மகாராஷ்டிராவில் கசியவிடப்பட்ட அசல் வினாத்தாள், ராஜஸ்தானில் உள்ள பிரபல பயிற்சி மையங்களுக்குப் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த வினாத்தாள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு கைமாறியுள்ளது. இந்த மெகா மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடைய வினாத்தாள் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த புனே வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி உட்பட இதுவரை 10 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
டியூஷன் மாஸ்டர் டு ₹100 கோடி அதிபர் - சிவராஜ் மோதி கைது:
இந்த விவகாரத்தில், மகாராஷ்டிராவின் லத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு 'ஆர்.சி.சி' (RCC) என்ற நீட் பயிற்சி மையத்தை நடத்தி வந்த சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கர் என்பவரை சிபிஐ நேற்று கைது செய்தது.
அதிர்ச்சிப் பின்னணி: ஏப்ரல் 23-ஆம் தேதியே, அதாவது தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே சிவராஜ் வினாத்தாளைப் பெற்றுள்ளார். அவரது அலைபேசியிலிருந்து அசல் நீட் வினாத்தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வளர்ச்சியும் சாம்ராஜ்யமும்: ஆரம்பக் காலத்தில் சைக்கிளில் சென்று டியூஷன் எடுத்த ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்து இளைஞரான சிவராஜ், வெறும் 10 மாணவர்களுடன் வாடகை அறையில் ஆர்.சி.சி மையத்தைத் தொடங்கினார். இன்று புனே, நாசிக் என 7 நகரங்களில் கிளைகளுடன், 40,000 மாணவர்கள் படிக்கும் கார்ப்பரேட் நிறுவனமாக இது வளர்ந்துள்ளது. இதன் ஆண்டு வருவாய் மட்டும் ரூ.100 கோடி ஆகும்.
ஜூன் 21-ல் மறுதேர்வு: இந்த வினாத்தாள் கசிவு நெட்வொர்க்கின் பின்னணியில் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, முறைகேடு நடந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக வரும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு (NEET Re-exam) நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
NEET Paper Leak Case CBI Arrests Coaching Tycoon as Massive Network Unravels