மகளின் படிப்பு செலவுக்கு ரூ.3,000 பரிசுக்காக, சேலையுடன் வெறுங்காலில் 3 கி.மீ. மராத்தான் ஓடிய 'வீர' தாய் ரமாபாய்..!
Mother Ramabai ran a 3 km marathon for a prize of Rs 3000 to cover her daughters education expenses
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், தன் மகளின் படிப்பு செலவுக்காக 03 கிலோ மீட்டர் தூரம் மராத்தான் ஓடி வெற்றிப்பெற்று எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
அதுவும், 3 கி.மீ போட்டி தூரத்தை வெறுங்காலுடன், ஓட்டப் பந்தயத்துக்கான பிரத்யேக ஆடை அணியாது சேலையில் கடந்ததும், அந்தப் போட்டியில் பரிசுத் தொகை ரூ.3000-ஐ வென்று அசத்தியுள்ளார்.
கோலேஸ்வர் கல்வி வளாகத்தின் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி பீட் மாவட்டத்தில் 'அமிர்த தவுத்' என்ற பெயரில் 3 கி.மீ மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.
இது சத்திரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் இருந்து பாக்யநகர் சவுக் வரையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வயதினரும் கலந்து கொண்டனர்.
47 வயதான பெண்மணி ரமாபாய் ரன்வீரும் கலந்துக்கொண்டார். கணவரை இழந்த அவர், சமையலராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மாரத்தான் பற்றி கேள்விப்பட்ட அவர் அந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

போட்டியில், சேலையை தூக்கிச் செருகிக் கொண்டு, செருப்புடன் ஓடிய அந்தப் பெண், செருப்பு கால்களில் இருந்து அடிக்கடி நழுவி வேகத்தடை போட்டதால் அதைக் கைகளில் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.
அவருடன் ஓடிய இளம் வயதினர் பலர் டிராக் சூட், நல்ல ஷூக்கள் என்று ஓட, எதையும் பொருட்படுத்தாமல் ஓடிய ரமாபாய் வெற்றியும் பெற்றுள்ளார். அந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.3,000 தான் என்றபோதும் ரமாபாய்க்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.5,000 பரிசாக வழங்கியுள்ளனர்.
அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்ட ரமாபாய் கூறியதாவது; ''நான் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எனக்கு ரூ.3000-க்கு பதில் ரூ.5,000 அளித்தனர். அதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. என் மகள் பூஜாவுக்கு நான் நோட்டு, பேனா வாங்கினேன். மீதமுள்ள பணத்தை இன்னொரு மகள் ஆர்த்திக்காக செலவு செய்வேன்.''என்று ஓர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். ரமாபாயின் வெற்றிக் கதை இணையத்தில் வைரலாகியுள்ளது.
English Summary
Mother Ramabai ran a 3 km marathon for a prize of Rs 3000 to cover her daughters education expenses