அரசுக்கு எதிராக போர் தொடுக்க தயாராகுதல், கலவரத்தை தூண்டுதல் போன்ற வழக்கில் கேரள இளைஞர் கைது..!
Kerala youth arrested for preparing to wage war against the government inciting riots
கேரள மாநிலம் எடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரெஜாஸ் ஷீபா சைதீக். வயது 26. இவர் 'ஜனநாயக மாணவர் சங்கம்' என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அத்துடன், சுயாதீன பத்திரிகையாளராகவும் பணியாற்றுகிறார். இவர் சாதி பிரிவினை, வகுப்புவாத வன்முறை, அரசு அடக்குமுறை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்கக் வலியுறுத்தி அவர், டெல்லியில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் கேரளாவிற்கு திரும்பியபோது, மராட்டிய மாநிலம் நாக்பூரில் வைத்து சைதீக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், சைதீக் மீது புதிய குற்றவியல் சட்டம் பிரிவு 149 (இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க தயாராகுதல்), பிரிவு 192 (கலவரத்தை தூண்டுதல்), பிரிவு 351 (மிரட்டுதல்), மற்றும் பிரிவு 353 (பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாக்பூரில் வசித்து வரும் சைதீக்கின் தோழி இஷா குமாரி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kerala youth arrested for preparing to wage war against the government inciting riots