சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் கீதம் பாடிய கர்நாடக துணை முதல்வர் - அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்.!!
karnataga deputy cm dk sivakumar sing rss anthem in assembly
கர்நாடக சட்டசபையில் கூட்டத்தொடரின்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, நான் காங்கிரசில் வளர்ந்தவன். உங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும் என்றார்.
அதற்கு, எதிர்க்கட்சி தலைவர் டி.கே. சிவக்குமாரிடம் நீங்கள் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்திருந்தீர்கள் அல்லவா? என்று கேள்வி எழுப்பினார். இதனை கேட்டதும் சிரித்த டி.கே. சிவக்குமார், ‘நமஸ்தே சத வத்சலே மாத்ருபூமே....’ என்றுத் தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதத்தை பாடினார்.
இதனால், எதிர்க்கட்சிகள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து டி.கே சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- "தலைவர்கள் என்றால் அவர்கள் எதிர்க்கட்சியினரை பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் வரலாற்றை பற்றி அறிய முயற்சிக்கிறேன். அவர்களுக்கும், எங்களுக்கும் கொள்கை ரீதியாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் பிறவியிலேயே ஒரு காங்கிரஸ்காரன். ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
karnataga deputy cm dk sivakumar sing rss anthem in assembly