ரூ.14,599 கோடி பண மோசடி: ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்த அமலாக்கத்துறை
Jaypee Infratech ED Case
டெல்லியை அடுத்த நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜேபி இன்ஃப்ராடெக் லிட் (Jaypee Infratech Ltd.) எனும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் (Enforcement Directorate - ED) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் விவரம்:
2007 முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டுகிறது.
மேலும், நொய்டாவிலிருந்து ஆக்ரா வரையிலான 165 கி.மீ. நீளமுள்ள ஆறு வழி எக்ஸ்பிரஸ் சாலை வழித்தடப் பராமரிப்பையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மோசடி மற்றும் கைது:
ஜேபி விஷ்டவுன் மற்றும் ஜேபி கிரீன்ஸ் போன்ற வீட்டு வசதித் திட்டங்களில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் அளித்த புகார்களின் அடிப்படையில், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுகள் முதலில் வழக்குப்பதிவு செய்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், "குடியிருப்புகள் கட்டப் பணம் கொடுப்பதாகச் சொல்லிப் பெறப்பட்ட முதலீட்டுப் பணம், கட்டுமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், வீடு வாங்கியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்," என்று கண்டறியப்பட்டது.
சுமார் ரூ.14,599 கோடி ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், மனோஜ் கவுரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.