புதிய மசோதாவுக்கு ஒப்புதல்; தமிழக பத்திரப் பதிவுத்துறையில் இனிமேல் எந்தெந்த ஆவணங்கள் செல்லாது..?
which documents will no longer be valid in the Tamil Nadu Registration Department
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திர பதிவு தொடர்பான முக்கிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, சொத்து பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர், அந்த மசோதாவை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்த மசோதாவிற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பத்திர பதிவு நடைமுறைகளில் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

இந்த புதிய பத்திர பதிவு மசோதாவின் படி, இனி ஒரு சொத்தை பத்திர பதிவு செய்யும்போது, அந்த சொத்திற்கான அசல் உரிமை ஆவணங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் நகல் ஆவணங்கள் அல்லது முழுமையற்ற பதிவுகளின் அடிப்படையில் பத்திர பதிவு செய்யும் நடைமுறை இனி அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், போலி ஆவணங்கள் பயன்படுத்தி சொத்துகளை விற்பனை செய்வது அல்லது உரிமை இல்லாதவர்கள் பத்திர பதிவு செய்வது போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கான மூலப்பத்திரம் இல்லாத சூழ்நிலை இருந்தால், அந்த சொத்திற்கான வருவாய் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என இந்த புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அவர்களின் சொத்தின் உரிமை தொடர்பான குழப்பங்கள் குறையும் என்றும், உண்மையான உரிமையாளர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும். மேலும், ஒரு சொத்து ஏற்கனவே அடமானத்தில் இருந்தால், அந்த அடமானம் பெற்ற நபர் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த தடையில்லா சான்றிதழ் பத்திர பதிவு செய்யும் நேரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அடமானத்தில் உள்ள சொத்துகளை மறைத்து விற்பனை செய்வது அல்லது ஒரே சொத்தை பலருக்கு விற்பனை செய்வது போன்ற மோசடிகளை தடுப்பதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும்.
English Summary
which documents will no longer be valid in the Tamil Nadu Registration Department