பழனி தைப்பூசத் திருவிழா; கடும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த பக்தர்கள்..!
Devotees fainted after being caught in a severe crowd crush at the Palani Thaipusam festival
தைப்பூச திருவிழா இன்று நாடு முழுவதும் உள்ள முருக பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. முருகனின் ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனபடி, பழனியில் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 01) மாலை 04 மணிக்கு மேல் நடைபெற்றது.
இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளான பக்தர்கள் நேற்று அதிகாலை 02 மணி முதல் பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் வரிசையில் குவியத் தொடங்கினர். பக்தர்களின் அதிக எண்ணிக்கையில், அதகரித்தபடியே இருந்ததால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் திணறினர்.

இதனால், மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை ஒருவழியாக மாற்றப்பட்டது. மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் பக்தர்களை போலீஸார் அணி அணியாக பிரித்து அனுப்பினர்.
ஆனால், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாலும் பக்தர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், மயங்கி விழுந்தவர்களை மீட்டு தோளில் சுமந்தபடி மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்துள்ளனர். பக்தர்கள் தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டதால், போதிய குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் பலர் சிரமத்துக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Devotees fainted after being caught in a severe crowd crush at the Palani Thaipusam festival