பாதுகாப்பில் அதிரடி காட்டும் இந்தியா...! உலக ராணுவச் செலவு பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்...!
India takes action defense Advances 5th place world military expenditure list
2025ஆம் ஆண்டுக்கான உலக ராணுவச் செலவின தரவரிசையில், அமெரிக்கா, சீனா, ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னணி நான்கு இடங்களை கைப்பற்றியுள்ளன. இந்த வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகளாவிய ராணுவச் செலவினத்தின் 58 சதவீதத்தை இந்த ஐந்து நாடுகளே பகிர்ந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த மதிப்பு சுமார் 1.68 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த ராணுவச் செலவு 2,887 பில்லியன் டாலர் என்ற அதிரடியான உயர்வை எட்டியுள்ளது. இதில், 92.1 பில்லியன் டாலர் செலவினத்துடன், உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ராணுவச் செலவு மேற்கொள்ளும் நாடாக இந்தியா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

உலகளாவிய அளவில் இந்தியாவின் பங்கு 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது.பாகிஸ்தானை நோக்கி மேற்கொள்ளப்பட்ட “ஆபரேஷன் சிந்தூர்” போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னணியில், ஆயுதப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க அவசரகால அடிப்படையில் பல்வேறு நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, 2026–27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2.19 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் நிலவும் எல்லைப் பதற்றங்கள், இந்தியாவின் பாதுகாப்புச் செலவினத்தை தொடர்ந்து உயர்த்தும் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
அதே நேரத்தில், 2016–20 மற்றும் 2021–25 காலகட்டங்களுக்கு இடையில் இந்தியா தனது ஆயுத இறக்குமதியை 4 சதவீதம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.இருப்பினும், உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீத பங்களிப்புடன் இந்தியா இன்னும் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.
கடந்த காலத்தில் ராணுவத் தேவைகளுக்காக அதிகமாக சார்ந்திருந்த ரஷியா மீது இந்தியா தனது சார்பை கணிசமாகக் குறைத்து வருகிறது. 2011–15 காலகட்டத்தில் 70 சதவீதமாக இருந்த ரஷியாவின் பங்கு, தற்போது 40 சதவீதமாகக் குறைந்துள்ளது.இந்நிலையில், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், இந்தியாவிற்கு நவீன ஆயுதங்களை வழங்கும் முக்கிய கூட்டாளிகளாக உருவெடுத்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
India takes action defense Advances 5th place world military expenditure list