ஜிஎஸ்டி சீர்திருத்தம்: சிறு வணிகங்களை எளிதாக்கும்.. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!
GST Reforms Prime Minister Modi is proud of the GST reforms that will make it easier for small businesses
நாட்டின் மிகப்பெரிய வரி அமைப்பான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கி, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகள் மட்டுமே கொண்ட புதிய வரி அமைப்பை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி அமைப்பு வரும் செப்டம்பர் 22 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:“சுதந்திர தின உரையில், ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்த எங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன். சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மத்திய அரசு பரந்தளவிலான திட்டத்தை வகுத்தது.
அந்த முன்மொழிவுகளை மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இணைந்து ஜிஎஸ்டி கவுன்சிலில் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தம் விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்மை தரும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சீர்திருத்தத்தின் மூலம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறையும் வாய்ப்பு அதிகம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
12% வரி விகிதத்தில் இருந்த பொருட்கள் 5% பிரிவிலும், 28% வரி விகிதத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் 18% பிரிவிலும் கொண்டு வரப்படுகின்றன. அதேசமயம், சொகுசு கார்கள், புகையிலை, பான் மசாலா, சிகரெட் போன்றவற்றுக்கு கூடுதல் சிறப்பு வரி விதிக்கப்படவுள்ளது.
இந்த சீர்திருத்தம் மக்களுக்கு நேரடி நிவாரணம் தரும் என்பதால், எதிர்வரும் வாரங்களில் பொருட்களின் விலைகளில் குறைவு ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
English Summary
GST Reforms Prime Minister Modi is proud of the GST reforms that will make it easier for small businesses