டெல்லியில் சிறுமி கூட்டு பலத்தகாரம் செய்து கொடூர கொலை; 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது; 2 கத்திகள், டெம்போ வாகனம் பறிமுதல்..!
Four people including three minors arrested in the case of the gang rape and murder of a young girl in Delhi
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 72 மணி நேரத்தில் 04 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லியின் சுவரூப் நகர் பகுதியில் உள்ள குஷக் ரோடு அருகே அமைந்த திறந்தவெளி வயலில், கடந்த 13-ஆம் தேதி காலை, 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. உடனடியாக போக்சோ சட்டப்பிரிவு 06 மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் குற்றத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் கிடைக்காததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு இழுபறி நீடித்தது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு டெம்போவை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த வாகனத்தின் பாதையை தொடர்ந்து கண்காணித்து சென்றபோது, அது கட்டா காலனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அதனை வாகன ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரித்ததில், கொலையில் தொடர்புடைய சிவம் என்கிற சுதாமா மற்றும் 16, 17 வயதுடைய 03 சிறுவர்கள் உள்பட 04 பேரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து படுகொலைக்கு பயன்படுத்திய 02 கத்திகள், ரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒருவருக்கு அந்த சிறுமியுடன் ஏற்கனவே பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லியின் சுவரூப் நகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Four people including three minors arrested in the case of the gang rape and murder of a young girl in Delhi