உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்; பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்டோர் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


உத்தராகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.சி.கந்தூரி(91), வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய கந்தூரி, இரண்டு முறை உத்தராகண்ட் முதல்வராக பதவி வகித்தவர். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பி.சி.கந்தூரியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;

''உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பி.சி. கந்தூரியின் மறைவுச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்திய ராணுவத்தில் மிகச் சிறந்த சேவையாற்றிய பிறகு பொதுவாழ்வில் நேர்மையான, எளிமையான, வெளிப்படையான, வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

நாட்டின் மற்றும் உத்தராகண்ட்டின் வளர்ச்சி, நல்லாட்சி, மக்கள் நலன் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தாக்கதாக இருக்கும். துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குறிப்பிட்டுள்ளதாவது;

''உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரியின் மறைவால் நான் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளேன். முப்படைப் பணி முதல் அரசியல் களம் வரை அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் எப்போதும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். முதல்வராக அவர் பதவி வகித்த காலத்தில் இது மிகத் தெளிவாக வெளிப்பட்டது. மத்திய அமைச்சராக அவர் ஆற்றிய பணிகளும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவையாக திகழ்கின்றன.

நாடு முழுவதும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக அவர் இடைவிடாமல் அயராத முயற்சிகளை மேற்கொண்டார். துயரம் சூழ்ந்துள்ள இந்நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி'' என தனது இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தாக, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

''உத்தராகண்டின் முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரியின் மறைவு குறித்த இதயத்தை நொறுக்கும் செய்தியை நாங்கள் பெற்றுள்ளோம்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், தேச சேவை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஈடுஇணையற்ற முன்மாதிரியாக கந்தூரி திகழ்ந்தார். அவரது ராணுவ வாழ்க்கை முதல் பொது வாழ்க்கை வரை, அவரது ஆளுமை முழுமையாக தேச நலன்களுக்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

தனது அரசியல் பயணத்தில், உத்தராகண்டின் வளர்ச்சி, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான பணி கலாச்சாரம் ஆகியவற்றுக்காக அவர் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார். தனது எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மூலம் மக்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தார். அவரது மறைவு உத்தராகண்டுக்கு மட்டுமல்லாமல், தேசிய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். மறைந்த அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதி பெறவும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமை அளிக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Uttarakhand Chief Minister BC Khanduri passes away


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->