49 வயது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்: 50 அடி பள்ளத்தாக்கில் உடலை வீசிய கொடூரம்: ஈரான் காதலியுடன் இன்ஜினியர் கைது..!
Engineer arrested with girlfriend in Iran for strangling wife and throwing her body into 50foot ravine
கோட்டயம் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொன்று 50 அடி பள்ளத்தாக்கில் உடலை வீசிய சம்பவம் தொடர்பில் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது ஈரான் நாட்டு காதலியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் அருகே உள்ள காணக்காரி என்ற பகுதியை சேர்ந்தவர் சாம் ஜார்ஜ். அவருக்கு 59. இவரது மனைவி ஜெஸி சாம், வயது 49. இவர்களுக்கு 28 வயதில் ஒரு மகளும், 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாப்ட்வேர் இன்ஜினியரான சாம் ஜார்ஜ் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா பட்டப்படிப்பும் படித்து வருகிறார். இதன் போது சாம் ஜார்ஜிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சாம் ஜார்ஜிக்கு கோட்டயத்தில் 4.5 ஏக்கர் நிலமும், கோவா மற்றும் கோவளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இதனால் கணவன், மனைவிக்கிடையே சொத்து தகராறும் இருந்துள்ளது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகள், தாய் ஜெஸியை பலமுறை போனில் அழைத்துள்ளார். அவரிடம் இருந்து பதில் அழைப்பு எதுவும் வராததால், இதுகுறித்து கோட்டயம் குரவிலங்காடு போலீசில் புகார் செய்துள்ளார். உடனடியாக சாம் ஜார்ஜி வீட்டு போலீசார் விரைந்துள்ளனர்.
ஆனால் வீட்டில் கணவன், மனைவி இருவரும் இல்லாத நிலையில், தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே நேற்று இடுக்கி மாவட்டம் உடும்பன்னூர் அருகே உள்ள செப்புக்குளம் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போது அது ஜெஸி உடையது என தெரியவந்துள்ளது.

அத்துடன், ஜெஸியின் கணவர் சாம் ஜார்ஜ் மைசூரூவில் தலைமறைவாக இருப்பது தெரியவர, இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்மனைவி ஜெஸியை கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசிய உண்மை தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 26-ஆம் தேதி வீட்டில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெஸியின் முகத்தில் சாம் ஜார்ஜ் மிளகு ஸ்ப்ரே அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை படுக்கையறைக்கு கொண்டு சென்று துண்டால் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் அன்றிரவேஜெஸியின் உடலை கார் டிக்கியில் போட்டு பள்ளத்தாக்கில் வீசிவிட்டு மைசூருவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சாம் ஜார்ஜிடன் கோட்டயம் பல்கலைக்கழகத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் தொடர்ந்து அவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Engineer arrested with girlfriend in Iran for strangling wife and throwing her body into 50foot ravine