பாஜக ஆளும் மாநிலத்தில் மீண்டும் வெடித்த ஹிஜாப் சர்ச்சை.!!
College in Mumbai bans Muslim girls from wearing hijab
கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் நடத்திய போராட்டம் இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது. இஸ்லாமிய மாணவிகளின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மாணவர்கள் சிலர் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஹிஜாப் தடை நீக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு ஆளும் மகாராஷ்டிராவின் மும்பை மாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை செம்பூர் என்.ஜி ஆச்சார்யா மற்றும் டீகோ மார்த்தா எனும் கல்லூரிக்கு வழக்கம் போல் மாணவர்கள் நேற்று வந்துள்ளனர்.
அப்போது திடீரென ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் மட்டும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மாணவிகளும் பெற்றோர்களும் கல்லூரி வாசலில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
College in Mumbai bans Muslim girls from wearing hijab