பாலிவுட்டில் சோகம்: காதல் நிராகரிப்பால் திருமணம் செய்யாமல் இருந்த பிரபல நடிகை, காதலன் இறந்த அதே நாளில் மரணம்..!
Bollywood actress and playback singer Sulakshana Pandit passes away
புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பின்னணிப் பாடகியுமான சுலக்ஷனா பண்டிட் (71), நேற்று மாரடைப்பால் காலமானார். இசையும், கலையும் நிறைந்த புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் விளங்கினார்.
'உல்ஜன்', 'ஹீரா பேரி', 'அப்னாபன்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 1975இல் வெளியான 'சங்கல்ப்' என்ற திரைப்படத்தில் இவர் பாடிய 'து ஹி சாகர் ஹே து ஹி கினாரா' என்ற பாடல், இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் கொடுத்தது.
சக நடிகர் சஞ்சீவ் குமாரை இவர், தீவிரமாகக் காதலித்தார். ஆனால், சஞ்சீவ் குமார் இவரது திருமண விருப்பத்தை நிராகரித்துள்ளார். இதனால் இவ்வளவு காலமும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சுலக்ஷனா பண்டிட் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த சுலக்ஷனா பண்டிட், நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். இந்தத் தகவலை அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான லலித் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு காரணமாக பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட சுலக்ஷனா பண்டிட், அதன்பிறகு உடல்நலம் குன்றியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நவம்பர் 06-ஆம் தேதிதான் நடிகர் சஞ்சீவ் குமார் உயிரிழந்தார். தற்போது, அவரது 40வது நினைவு நாளிலேயே சுலக்ஷனா பண்டிட்த்தும் காலமாகியுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bollywood actress and playback singer Sulakshana Pandit passes away