பெற்றோர்களே உஷார்.. அடினோவைரஸால் 40 குழந்தைகள் உயிரிழப்பு...!!
40 children die due to adenovirus effect
மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் பரவல் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் நோயால் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிக அளவில் பாதிப்படைகிறார்கள். அடினோவைரஸ் வேகமாக காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்று நோயாகும்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று அடினோவைரஸால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 9 நாட்களில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை அதிஃபா காதுன் என்ற ஒன்றரை வயது குழந்தையும், அர்மன் காசி என்ற 4 வயது சிறுவனும் பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று நேற்று மாலை 4 மணியளவில் அதே மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள் உயிரிழந்ததால் நேற்று ஒரே நாளில் இறப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

அடினோவைரஸ் அறிகுறிகளுடன் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்த 4 குழந்தைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் இறந்ததாகக் கூறப்படும் அனைத்து குழந்தைகளும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் போன்ற பொதுவான அடினோவைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சையில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை மாநில அரசு மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் குழந்தைகளை, குறிப்பாக 2 வயது அல்லது அதற்கு குறைவான குழந்தைகள் அடினோவைரஸால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால் குழந்தை மருத்துவர்களுக்கு அடினோவைரஸ் காய்ச்சல் குறித்த ஆலோசனையை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், தொண்டை புண், நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல் போன்றவை அடினோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த வைரஸ் தோல் தொடர்பு மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் காற்றில் பரவக்கூடியது. இதுவரை அடினோவைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.
அடினோவைரஸ் வயிற்று பிரச்சனைகள், சளி, நிமோனியா என பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த வைரஸ் வயது வித்தியாசமின்றி யாரையும் பாதிக்கலாம். எனவே அனைவருமே அடினோவைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுதல் மற்றும் நெரிசலான இடங்களில் முக கவசம் அணிதல், இருமல் இருப்பவர்களிடமிருந்து சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது கீமோதெரபியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக இருக்கும். அத்தகைய நபர்கள் அடினோவைரஸால் பாதிக்கப்பட்டால் நிமோனியாவை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே அவர்களை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
40 children die due to adenovirus effect