பொள்ளாச்சி: சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Pollachi case judgement
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதி தான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாதது தான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் புகார் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைக்க வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றம், 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருந்தால் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பல காரணங்களாக புகார் அளிக்க முன்வரவில்லை. இப்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பல பெண்கள் துணிச்சல் பெற்று புகார் கொடுக்க முன்வரலாம். அவ்வாறு முன்வரும் பெண்களுக்கும் நீதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Pollachi case judgement