நடத்தையில் சந்தேகம்: மனைவியை குத்திக்கொன்ற கணவன்!
Doubt in murder Husband stabs wife to death
நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் நடுரோட்டில் மனைவியை குத்திக்கொன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் பாரதி.இவருடைய மனைவி சுவேதா, இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.மனைவி சுவேதா தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏ.பி.டி. ரோட்டில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்த சுவேதா, நேற்று காலையில் அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று விட்டார்.
பின்னர் வீடு திரும்பிய அவர், தான் வேலை பார்க்கும் கடைக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி, அவரை வழிமறித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு சுவேதா மறுக்கவே, 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சுவேதா புறப்பட்டு சென்றார். ஆனாலும் விடாமல் பின்தொடர்ந்து சென்ற பாரதி நடுரோட்டில் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
தகராறு முற்றவே, ஆத்திரத்தில் இருந்த பாரதி, திடீரென சுவேதாவின் வயிறு உள்பட பல இடங்களில் கத்தியால் குத்தினார். ஆத்திரம் அடங்காத பாரதி உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி கழுத்தில் கால் மற்றும் கை வைத்து நெரித்தார். இதனால் சிறிது நேரத்தில் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலை எடுத்து சாலையில் போட்டு விட்டு அங்கேயே அருகில் அமர்ந்தார். உடனே அவரை பொதுமக்கள் பிடித்து, அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடத்தையில் சந்தேகம் அடைந்து சுவேதாவை கொலை செய்ததாக அவர் கூறினார்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து பாரதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Doubt in murder Husband stabs wife to death