கணவரின் காரை தீவைத்து எரித்த மனைவி..சொத்து தகராறில் நடந்த கொடுமை!
Wife burns husbands car Cruel act over property dispute
சொத்து தகராறில் கணவரின் புதிய காரை அவரது மனைவியே தீவைத்து எரித்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா போகத்யானட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவகவுடா பட்டீல். இவரது மனைவி சாவித்திரிக்கும், சிவகவுடா பட்டீலுக்கும் திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது.இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிரஜ்வல் உள்ளார்.
இந்த நிலையில் தம்பதி சிவகவுடா பட்டீல்- சாவித்திரி இடையே குடும்பத்தகராறு மற்றும் சொத்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது . இதில் சாவித்திரிக்கு ஆதரவாக அவரது மகன் பிரஜ்வல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சாவித்திரியும், அவரது மகன் பிரஜ்வலும் சேர்ந்து சிவகவுடா பட்டீல் வாங்கியிருந்த புதிய காரை தீவைத்து எரித்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகவுடா பட்டீலுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் காரில் பிடித்த தீயை அணைத்தனர்.
ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து தகராறில் கணவனின் காரை மனைவியே தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Wife burns husbands car Cruel act over property dispute