மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு! காவலர் உட்பட 3 பேர் பலி!!
3 people including a policeman were killed in a country bomb attack at a polling center in West Bengal
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு வன்முறை வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வன்முறையில் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அபார வெற்றிபெற்றது.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. நேற்று இரவு தெற்கு பர்கானஸ் மாவட்டம் பங்ஹொரி பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுகொண்டிருந்தபோது வாக்கு எண்ணும் மையத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த வாக்கு எண்ணும் மையத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு ரப்பர் குண்டு உடைய துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராஜூ மொஹால் என்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்தார். மேலும் ஐஎஸ்எப் கட்சி தொண்டர்கள் ஹரசன் மொஹால், ரசுல் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
3 people including a policeman were killed in a country bomb attack at a polling center in West Bengal