மலையாள சினிமாவின் மனிதநேய முகம் ஸ்ரீனிவாசன் மறைவு...! - ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்
passing Sreenivasan humane face Malayalam cinema Rajinikanth heartfelt condolence message
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மலையாள திரையுலகின் மூத்த கலைஞர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார். கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் தனித்துவமான முத்திரையை பதித்த இவர், நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் இயல்பான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த ஸ்ரீனிவாசன், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு, மலையாள திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த், ஆடியோ பதிவு மூலம் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது,“என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் என்னுடன் இணைந்து பயின்றவர்.
சிறந்த நடிகர் மட்டுமல்ல, மனித நேயம் நிறைந்த நல்ல மனிதர். ஒரு உண்மையான நண்பனை இழந்துவிட்டேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்".ரஜினிகாந்தின் இந்த உருக்கமான இரங்கல் செய்தி தற்போது ரசிகர்களிடையே உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
passing Sreenivasan humane face Malayalam cinema Rajinikanth heartfelt condolence message