சென்னையில் போதைப் பொருள் வேட்டை: நடிகை, துணை நடிகை, கிரிக்கெட் வீரர் கைது...!
Drug bust in Chennai Actress supporting actress and cricketer arrested
சென்னையில் போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை முறியடிக்கும் வகையில் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், நடிகை, துணை நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வளசரவாக்கம் பகுதியில் கடந்த 4-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த நால்வரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர்களிடம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வெங்கடேஷ்குமார், கார்த்திக் ராஜா, யஷ்வந்த், விக்னேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேற்கு மாம்பலம், வடபழனி, நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களுடன் மேலும் ஐந்து பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
ஸ்ரீராம், அல்விபின்ஷா, வின்சி நிவேதா, நிஸ்வான், அஞ்சு கிருஷ்ணா ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கிராம் உயர் ரக கஞ்சா, போதை ஸ்டாம்புகள், 10 செல்போன்கள், கார் மற்றும் டைரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அஞ்சு கிருஷ்ணா ஒரு நடிகை, வின்சி நிவேதா துணை நடிகை, ஸ்ரீராம் கிரிக்கெட் வீரர் என்பது தெரியவந்தது.மேலும், கேரளாவைச் சேர்ந்த அல்விபின்ஷா போதைப் பொருள் மொத்த வியாபாரியாக செயல்பட்டு, பெங்களூருவிலிருந்து சரக்குகளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவருக்கு நைஜீரியாவைச் சேர்ந்த சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
துணை நடிகை வின்சி நிவேதா, கண்ணாடி பவுச்கள், மணிப்பர்ஸ், மேக்-அப் பெட்டிகள் போன்றவற்றில் சிறு பொட்டலங்களாக போதைப் பொருட்களை மறைத்து விற்பனை செய்து வந்ததாகவும், கடந்த எட்டு மாதங்களாக சினிமா துறையினர், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து விநியோகம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்காவிலிருந்து மும்பை வழியாக உயர் ரக வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி, போதை மாத்திரைகளாக மாற்றி விற்றதும் விசாரணையில் வெளிச்சம் பார்த்துள்ளது.
ஒரு மாத்திரை ரூ.3,500 வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தினாலே அடிமையாக்கும் இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ள பெரிய தலைகளை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Drug bust in Chennai Actress supporting actress and cricketer arrested