லிப்ட் விபத்தில் பிரபல இயக்குநரின் 4 வயது மகன் பலி...!
4 year old son famous director dies lift accident
கன்னட திரையுலகில் சின்னத்திரை இயக்குநராக பெயர் பெற்றவர் கீர்த்தன் நாடகவுடா. நடிகர் யஷ் நடித்த ‘கே.ஜி.எப்.’, ‘கே.ஜி.எப்.–2’, பிரபாஸ் நடித்த ‘சலார்’ உள்ளிட்ட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய பல பிரமாண்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர்.
இவருக்கு சம்ருத்தி படேல் என்ற மனைவியும், 4 வயது மகன் சிரஞ்சீவி சோனார்ஸ் கே. நாடகவுடா என்பவரும் உள்ளனர். குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.இந்த நிலையில், சமீபத்தில் குடும்பத்துடன் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார்.

அப்போது, அங்குள்ள கட்டிடத்தில் சிறுவன் சிரஞ்சீவி தனியாக லிப்டில் ஏற முயன்ற தருணத்தில், எதிர்பாராத விதமாக லிப்ட் கதவு திடீரென மூடியது. இந்த கோர விபத்தில் சிறுவன் பலத்த காயமடைந்தான்.
உடனடியாக கீர்த்தன் நாடகவுடா, அவரது மனைவி மற்றும் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் இணைந்து சிறுவனை மீட்டு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுவன் சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த துயர சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் மறைவுக்கு நடிகர் யஷ், நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
லிப்ட் விபத்தில் பறிபோன நான்கு வயது உயிர் – திரையுலகில் சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்திய சம்பவமாக இது மாறியுள்ளது.
English Summary
4 year old son famous director dies lift accident