ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரம்: ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம், துபாயிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்ததாகக் கூறி, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (DRI) அதிகாரிகள் நடிகை ரன்யா ராவை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை முடிவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது காதலன் தருண் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தற்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், ரன்யா ராவ் துபாயிலிருந்து மொத்தம் 127 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, நடிகை ரன்யா ராவின் தாய் ரோகினி மற்றும் தருணின் தாய் ரமா ராஜு ஆகியோர், தங்களது பிள்ளைகள் கைது சட்டவிரோதமானது எனக் கூறி, வழக்கை ரத்து செய்யவும், கைது நடவடிக்கைக்கு தடை விதிக்கவும் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அனு சிவகுமார் மற்றும் விஜய்குமார் ஏ. பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நடைபெற்றது. விசாரணையின் போது, ரன்யா ராவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,“கைது நடவடிக்கையின் போது சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. மேலும், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்து கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்”என்று வாதிட்டார்.

அதேபோல், தருணின் தாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் கைது நடவடிக்கைக்கு எதிராக வாதம் முன்வைத்தார்.இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்,“ரன்யா ராவுக்கு தேவையான வீடியோ ஆதாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தியது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள்மீது ‘காபிபோசா’ சட்டம் அமலில் இருப்பதால், ஜாமீன் கிடைத்தாலும் ஒரு ஆண்டுக்குள் சிறையிலிருந்து வெளியே வர இயலாது. எனவே, ஆட்கொணர்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்”என்று வலியுறுத்தினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரன்யா ராவ் மற்றும் தருண் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranya Rao gold smuggling case court dismissed habeas corpus petition


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->