'உலகமே போரால் தள்ளாடும் போதும் இந்தியா கெத்து காட்டுது'... மாதந்தோறும் 2,000 கோடி UPI பரிவர்த்தனை...! - மதுரையில் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
2000 crore UPI transactions every month Nirmala Sitharaman proud in Madurai
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, உலகப் பொருளாதார சூழல், இந்தியாவின் அபார வளர்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் தமிழகத்தின் சாதனைகள் குறித்து பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்ததாவது,"உலக நாடுகளை தொடர்ந்து பாதித்து வரும் போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக நெருக்கடிகள், உரங்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்கள் பொருளாதாரத்தை சோதனைக்குள்ளாக்கி வருகின்றன.

இத்தகைய கடினமான சூழலிலும் இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தை தளர்வின்றி தொடர்வதோடு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி பொருளாதார நாடாக வலிமையாகத் திகழ்கிறது.இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலக நாடுகள் வியக்கும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக, யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை அமைப்பு உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண தளங்களில் ஒன்றாக உருவெடுத்து, ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மிகுந்த நம்பகத்தன்மையுடன் கையாண்டு வருகிறது. இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலக அரங்கில் உயர்த்திக் காட்டுகிறது.
நாட்டின் அறிவுசார் திறனையும் தொழில்நுட்ப வளத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது 2,100-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் பெருநகரங்களிலேயே மட்டுப்படாமல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவடைந்து, புதிய வேலைவாய்ப்புகள், முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்த்து வருகின்றன.
வளர்ச்சியில் பின்தங்கிய 114 மாவட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றை 'லட்சிய மாவட்டங்கள்' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அனைத்து அரசுத் திட்டங்களையும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தி முழுமையான முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த முயற்சியின் பலனாக, தமிழகத்தின் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து, நாடு முழுவதும் முன்னுதாரணமாக திகழ்கின்றன.உள்ளூர் உற்பத்திகளை உலகளாவிய சந்தையுடன் இணைக்கும் நோக்கில், சிட்பி வங்கி விருதுநகரில் தனது சேவையை தொடங்கி, அப்பகுதியின் புகழ்பெற்ற விருதுநகர் வத்தல் வணிகத்திற்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல், மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் மீண்டும் சாகுபடியில் கொண்டு வந்து, சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியிருப்பது பாரம்பரிய வேளாண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
பாரம்பரியப் பெருமையையும், புதுமைக்கான முன்னேற்றத்தையும் ஒருங்கே தாங்கி நிற்கும் நகரம் மதுரை. காலம் மாறினாலும் தனது தனித்துவத்தையும் பண்பாட்டு அடையாளத்தையும் பாதுகாத்து, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்கி வருகிறது.
அதேபோல், விண்வெளி, தொழில்நுட்பம், பொருளாதாரம், டிஜிட்டல் சேவைகள், உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகள், உலக அரங்கில் நாட்டை தவிர்க்க முடியாத வலிமைமிக்க சக்தியாக உயர்த்தியுள்ளன.இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
English Summary
2000 crore UPI transactions every month Nirmala Sitharaman proud in Madurai