6 மாதங்களுக்கு பரவல் அதிகம்...! தமிழகத்தில் அதிகரிக்கும் உண்ணி காய்ச்சல்...! - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
High prevalence 6 months Tick borne fever increasing in Tamil Nadu Important announcement from Health Department
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்துக்கு இடையே பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது,"பருவமழை காலத்தில் பல்வேறு நோய் பாதிப்புகள் மக்களிடையே பரவலாக கண்டறியப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, பல்வேறு வகையான காய்ச்சல்களும் தற்போது காணப்படுகின்றன.அவற்றில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி காய்ச்சல் பாதிப்பும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் ‘ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ என்ற நுண்ணுயிரி தொற்றால் ஏற்படுகிறது.
இந்த நுண்ணுயிரியை சுமந்து செல்லும் ஒட்டுண்ணிகள் பொதுவாக புல்வெளிகள், புதர்கள் மற்றும் செடி கொடிகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன.முன்பு பெரும்பாலும் காட்டுப்பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த வகையான காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சூழ்நிலைகளின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகளிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடல் சோர்வு, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும்.
சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படலாம்.இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.உண்ணி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
அதேநேரத்தில், அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.பருவமழை காலங்களில் செடி, கொடி, புதர்கள் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதுடன், உடலில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
High prevalence 6 months Tick borne fever increasing in Tamil Nadu Important announcement from Health Department