மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட்டா...? சிபிஎஸ்இ (CBSE) இயற்பியல் விடைத்தாள் குளறுபடியால் வெடித்த சர்ச்சை...! - விசாரணையில் இறங்கும் 'ஐஐடி' (IIT) நிபுணர் குழு!
Playing future students controversy that erupted over CBSE Physics answer sheet IIT expert team investigate
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE இந்த ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த முறையில் அறிமுகப்படுத்திய புதிய இணையவழி மதிப்பீட்டு நடைமுறை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களால் மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றமடைந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 7,574 தேர்வு மையங்களில் கடந்த பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றன. பின்னர் மே 13-ஆம் தேதி தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.மதிப்பெண் வெளியீட்டுக்குப் பிறகு, மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் வசதி மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டது.
இந்தாண்டு சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் 98 லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, முழுமையாக மின்னணு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுடெல்லியைச் சேர்ந்த மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்தவா தனது இயற்பியல் விடைத்தாள் நகலை ஆன்லைனில் பார்வையிட்டபோது பெரும் அதிர்ச்சியடைந்தார். அந்த விடைத்தாளில் இடம்பெற்றிருந்த கையெழுத்து, எழுத்து நடை மற்றும் பதில்களின் அமைப்பு அனைத்தும் தன்னுடையதல்ல என்பதை அவர் கண்டறிந்தார்.
தனது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் விடைத்தாள்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது இந்த குழப்பம் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்தது.தவறான விடைத்தாளின் அடிப்படையில் தமக்கு வெறும் 50 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இதனால் உயர்கல்விக்குத் தேவையான 75 சதவீத தகுதியை இழந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.
இதுபோல மற்றொரு மாணவியும் தனது வேதியியல் விடைத்தாளின் முதல் பக்கம் மட்டும் தன்னுடையதாக இருந்ததாகவும், அதன் பின்னர் இணைக்கப்பட்டிருந்த பக்கங்கள் வேறு மாணவருடையவை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து, CBSE நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.
மே 25-ஆம் தேதி மாலை, மாணவர் வேதாந்தை நேரடியாக தொடர்புகொண்டு அவரது உண்மையான விடைத்தாளை முறையாக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.விடைத்தாள்கள் மின்னணு மயமாக்கப்பட்ட செயல்முறையின் போது மாற்றமடைந்திருக்கலாம் என்பதை வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சம்பவம், இணையவழி மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறுகளின் மூல காரணத்தை கண்டறிய IIT Madras மற்றும் IIT Kanpur கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Playing future students controversy that erupted over CBSE Physics answer sheet IIT expert team investigate