உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு! பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி! உற்சாகமான அன்புமணி!  - Seithipunal
Seithipunal


முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ரத்து செய்துள்ளது சமூகநீதி, பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்  பணிக்கான போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இடஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றி  புதிய நியமனப் பட்டியலைத் தயாரிக்கும்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில் வேதியியல், இயற்பியல், உள்ளிட்ட 12  பாடங்களுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவற்றில் வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினத்தவருக்கும் துரோகம் இழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படி 24.11.2019 அன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலில், அதிக மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும், பட்டியல் இனத்தவர்கள்  5 பேரையும் பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவரவர் சமூகப் பிரிவுகளில் வாரியம் சேர்த்திருந்தது. இது  அந்தந்த சமூகப் பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். இதுகுறித்த புள்ளி விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு கடிதமும் எழுதியிருந்தேன்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட தேர்வு வாரியம், அதன் நிலைப்பாடு தான் சரியானது என்று கூறி பிடிவாதம் பிடித்தது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், இந்த விவகாரத்தில்  பாட்டாளி மக்கள் கட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முன்வைத்த வாதங்களையே எதிரொலித்திருக்கிறார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை  ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து  நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார். இது சமூக நீதிக்கும், சமூகநீதியை மீட்க பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின்படி முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 பணியிடங்களும், பட்டியலினத்தவருக்கு 5 இடங்களும் கூடுதலாக கிடைக்கும். சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் இவ்விஷயத்தில் தலையிட்டிருக்காவிட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சமூகநீதி கிடைத்திருக்காது. சமூகநீதி படுகொலைக்கு எதிரான இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர வேறு எந்தக்கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிப் படுகொலை வேதியியல் முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்துடன் முடிவடைந்து விடவில்லை. கடந்த ஜனவரி 2&ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலிலும் சமூக அநீதி தொடர்கிறது. இதனால் இந்த பாடங்களில் முறையே 28, 12, 06 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா சுட்டிக்காட்டியிருந்தார். வேதியியல் பாடத்திற்கான புதிய தேர்வுப்பட்டியலை தயாரித்து வெளியிடும்போது தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் புதிய தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டிய அமைப்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து புரிதல் இல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டது தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள்  ஏற்படுவதை தடுக்க சமூகநீதியில் அக்கறையும், புரிதலும் கொண்ட உயரதிகாரிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற அமைப்புகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court cancel senior teacher selected list


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal