கர்நாடகா தேர்வறையில் அதிர்ச்சி: பிட் அடித்து பிடிபட்ட மாணவர் பேராசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பு...!
Shock Karnataka exam hall Student caught cheating attacks professor creating stir
கர்நாடக மாநிலத்தில் தேர்வு அறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பேராசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம், குவெம்பு நகரில் செயல்பட்டு வரும் டாக்டர் மலகாரெட்டி ஹோமியோபதி கல்லூரியில் நேற்று முன்தினம் மூன்றாம் பருவ ஹோமியோபதி தேர்வு நடைபெற்றது.
தேர்வின் போது ஷஃபாஸ் கான் என்ற மாணவர் செல்போனை மறைத்து வைத்து முறைகேடாக காப்பி அடித்தது கண்காணிப்பு பணியில் இருந்த பேராசிரியர் சிவராஜின் கவனத்திற்கு வந்தது.

உடனடியாக அவரது விடைத்தாளை பறிமுதல் செய்த பேராசிரியர், தேர்வு மையத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மாணவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென பேராசிரியரை முகத்தில் தாக்கினார்.
அங்கு இருந்த மற்ற மாணவர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து வெளியேற்றினர்.இந்த சம்பவம் தேர்வு மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை கிளப்பின
தாக்குதல் நடத்திய ஷஃபாஸ் கான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், கல்லூரி நிர்வாகம் மாணவரை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் போலீசில் புகார் அளிக்க முன்வராத நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Shock Karnataka exam hall Student caught cheating attacks professor creating stir